'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம் செலுத்தினால் மட்டுமே,
குழந்தைகளுக்கு தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்' என, ரயில்வே
அறிவித்துள்ளது.
ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது, ரயில்களில் பயணம் செய்யும்,
5 - 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, அரை டிக்கெட் கட்டணத்தில், இருக்கை
மற்றும் படுக்கை வசதி அளிக்கப்பட்டு வருகிறது. 5 வயதுக்கு கீழ் உள்ள
குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், 'அரை டிக்கெட் நடைமுறை ஒழிக்கப்படும். 5 வயதுக்கு
மேற்பட்ட குழந்தைகளுக்கும், இனி, முழு டிக்கெட் தான் எடுக்க வேண்டும்' என,
கடந்தாண்டு டிசம்பரில், ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி,
குழந்தைகளுக்கான கட்டணம் மற்றும் படுக்கை வசதி ஒதுக்கீட்டில் ரயில்வே
நிர்வாகம் மாற்றம் செய்யவுள்ளது.
புதிய விதிமுறைப்படி, பெரியவர்களை போல், 5 - 12 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கும், முழு கட்டணம் செலுத்தினால் தான், அவர்களுக்கு தனியாக,
இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படும். ஏப்ரல், 22 முதல், இந்த
நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்மூலம், ரயில்வேக்கு, ஆண்டுக்கு, 525 கோடி
ரூபாய் வருவாய் கிடைக்கும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.