பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் எந்தத் துறையில் சேருவது என்ற குழப்பம் ஏற்படுவது வழக்கம்.
எது முன்னணி படிப்பு, எதில் சேர்ந்தால் எதிர்காலத்தில்
வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்ற குழப்பம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல்
பெற்றோர்களுக்கும் ஏற்படும்.
இதுகுறித்து தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் முதன்மையர்
(திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ்.வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்தது:
நல்ல பொறியியல் கல்லூரிகளுக்கு எப்போதும் மாணவர்கள் மத்தியில்
வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, பாரம்பரியம் மிக்க கல்லூரிகளில் சேர
மாணவர்களுக்கு வரவேற்பு உள்ளது.
பொறியியல் படிப்புக்கு வரவேற்பு குறைந்துவிட்டது என்று சொல்லும்
அளவுக்கு அந்தப் படிப்பு மோசமானது அல்ல. உண்மையில் அப்படிப்பட்ட நிலைமை
பொறியியல் படிப்புக்கு ஏற்படவில்லை. மிகவும் விரும்பிப் படிக்கும்
படிப்பாகவே பொறியியல் படிப்பை மாணவர்கள் கருதுகின்றனர்.
ஆனால், மோசமான கல்லூரியில் பொறியியல் படிப்பதை விட, நல்ல கல்லூரியில்
கலை, அறிவியல், சட்டவியல், இதழியல் போன்ற படிப்புகளைப் படிப்பது நல்லது.
சட்டம், இதழியல் துறைகளில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும்,
அத்துறைகளில் நல்ல ஆளுமைகள் தேவைப்படுவதால், அத்துறைகளை மாணவர்கள் தேர்வு
செய்யலாம்.
மாணவர்களைப் பொருத்த வரை பொறியியல் படிப்பை இரு வகைகளாகப்
பார்க்கின்றனர். ஒன்று பிரபலமான படிப்பு; மற்றொன்று உணர்வுப்பூர்வமான
படிப்பு.
இதில், மாணவர்கள் தங்கள் நண்பர்கள் கூறும் பிரபலமான துறையைத் தேர்வு
செய்வர். இப்படித்தான் கடந்த 15 ஆண்டுகளாக 10 முன்னணி படிப்புகள்
கணிக்கப்படுகின்றன.
அடிப்படை பொறியியல்
கடந்த 4 ஆண்டுகளாக மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்
என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் ஆகிய படிப்புகளுக்கு
மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
இதற்கு அடுத்து சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் ஆகிய படிப்புகளுக்கு வரவேற்பு உள்ளது.
இவற்றில், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்
என்ஜினீயரிங் ஆகியவை பாரம்பரியப் படிப்புகள். இதற்கான முக்கியத்துவம்
முன்னை விட அதிகமாகிவிட்டது.
நம் நாட்டில் உள்கட்டமைப்புக்கான முதலீடு நிறைய வரப் போகிறது.
உள்கட்டமைப்புத் துறையில் முந்தைய அரசு ஒரு டிரில்லியன் டாலர் முதலீடு
செய்ய தீர்மானித்தது. இது மிகப் பெரிய முதலீடு என அப்போதே கூறினேன்.
உள்கட்டமைப்பு என்பது பொறியியல் தொடர்பானது. குறிப்பாக, சிவில்,
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை
உள்கட்டமைப்புத் தொடர்புடையவை என்பதால், இத்துறைகளில் நிறைய
வேலைவாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய மத்திய அரசும் "இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' (மேக் இன்
இந்தியா) என்ற முழக்கத்தை முன்வைத்துச் செயல்படுகிறது. இந்தப்
பிரசாரத்திலும் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 3 துறைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக
இருக்கின்றன.
அதனால், நிகழாண்டும் மெக்கானிக்கல் துறைக்கு மாணவர்கள் மத்தியில் நிறைய
வரவேற்பு இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு. இதற்கு அடுத்து
எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறை பிரபலமான படிப்பு என்பதால் அதற்கும்
வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது. சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் துறைகளுக்கும் நிச்சயம் வரவேற்பு இருக்கும்.
கணிப்பொறி அறிவியல்
கம்ப்யூட்டர் சயின்ஸ் நிலையாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.)
இறங்கு முகத்தில் இருக்கிறது என்று எல்லோரும் கூறினாலும், அது சரியல்ல.
தகவல் தொழில்நுட்பத் துறை மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. இப்போதுள்ள
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது கவனம்
செலுத்துகின்றன.
நம் நாட்டிலும் தகவல் தொழில்நுட்பச் சேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நம்
நாட்டில் மின்னணு ஆளுகைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கெல்லாம்
தகவல் தொழில்நுட்பத் துறை சேவை மிகவும் அவசியம். எனவே, கம்ப்யூட்ர்
சயின்ஸ் படிப்புக்குத் தேவை நிச்சயம் இருக்கிறது.
உயிரித் தொழில்நுட்பம்
பயோ டெக்னாலஜி படிப்பு பிரபலமானதாக இல்லாவிட்டாலும், சில மாணவர்கள் இந்தப்
படிப்புதான் படிக்க வேண்டும் என்ற இலக்குடன் இருப்பர். அவர்களெல்லாம்
பி.டெக். படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டும் என விரும்ப
மாட்டார்கள். அந்த மாதிரியான மாணவர்கள்தான் பயோ டெக்னாலஜி படிக்க
விரும்புவர்.