பிளஸ் 2 கணித குழப்பத்திற்கு 13 மதிப்பெண்கள் 'கீ ஆன்சர்' தயாரிப்பு குழுவிடம் வலியுறுத்தல்

'பிளஸ் 2 கணிதம் வினாத்தாளில் குழப்ப வினாக்களை கருத்தில்கொண்டு மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் வழங்க 'கீ ஆன்சர்' தயாரிப்பு குழு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்,' என கணித ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்தாண்டு பிளஸ் 2 கணிதம் உட்பட பல பாடங்களிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் 'சென்டம்' பெற்றனர். இதற்கு, 'வினாத்தாள் எளிதாக இருந்ததாகவும், விடைத்தாள் மதிப்பீடு கடுமையாக இல்லை,' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனால் இந்தாண்டு வினாத்தாள் அமைப்பில் பெரும்பாலும் ஒரு மதிப்பெண் பகுதியில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் சிந்தித்தும் அல்லது பாடத்தில் இதுவரை கேட்காத பகுதிகளில் இருந்து வினாக்கள் 'தேடி பிடித்தும்' கேட்கப்பட்டிருந்தன.

குறிப்பாக கணித வினாத்தாளில் பல கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தமிழ்வழி வினாத்தாளில், 28வது வினாவில் 'வெக்டர்' என்பதற்கு பதிலாக 'பிழையான வார்த்தை இடம் பெற்றது. ஆங்கில வழி வினாத்தாளில் பிழை இல்லை. ஒரு வினாவில் எழுத்துப் பிழை இருந்தால் அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும்.

அதேபோல், ஆறு மதிப்பெண் பகுதியில் 43வது வினாவில் 'நேர்கோடு' என்ற வார்த்தை இடம் பெறாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். அதே பகுதியில் 52வது வினா 'புளு பிரிண்ட்' அடிப்படையில் இல்லை. பாடத்தில் இல்லாத 'தேற்றம்' என்ற உருவாக்கப்பட்ட வினாவாக அது அமைந்து இருந்தது. எனவே இவ்வினாக்களை எழுத முயற்சி செய்துஇருந்தாலே மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். இதேபோல் ஆங்கில வழி வினாத்தாளிலும் 52வது வினாவிற்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்.

மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு வழங்கிய 'கற்றல் கட்டகம்' கையேடுகளில் உள்ள வினாக்கள் தமிழ், ஆங்கில தேர்வுகளில் இடம் பெற்றன. ஆனால் கணிதத்தில் இடம் பெறவில்லை. எனவே, இம்மாவட்டங்கள் மற்றும் கிராம மாணவர்கள் கணித தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

13 மதிப்பெண்கள்:இதுகுறித்து தமிழ்நாடு கணித முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் விஜயகுமார் கூறுகையில், "கணிதத் தேர்வில் உள்ள இதுபோன்ற குழப்பங்களை கருத்தில் கொண்டு 'கீ ஆன்சர்' தயாரிக்க வேண்டும். இதன்படி தமிழ்வழி மாணவர்களுக்கு 13 மதிப்பெண்களும், ஆங்கில வழியில் 6 மதிப்பெண்களும் வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்," என்றார்.

மூன்று'கீ ஆன்சர்' குழு :இந்தாண்டு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் கணிதத் தேர்வுக்கான 'கீ ஆன்சர்' தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இதில் இடம் பெற்ற ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "ஆசிரியர்கள், பெற்றோர் வலியுறுத்தியதன் பேரில் கணித வினாத்தாளில் உள்ள குழப்பங்களை கவனத்தில்கொள்வோம்.

வினாத்தாளில் உள்ள பிரச்னைகள் எங்களுக்கும் நன்கு தெரியும். எனவே சம்பந்தப்பட்ட வினாக்களை எழுத முயற்சித்தாலே 13 மதிப்பெண்கள் வழங்கலாம் என அரசிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளோம்," என்றனர்.