இங்கிலாந்தின்,
தெற்கு வான் பகுதியை, 'வாஸ்ப் சவுத்' என்ற எட்டு கேமராக்களைக் கொண்ட சாதனம்
மூலம், 'கீல்' பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அதன்
மூலம்தான் சமீபத்தில் இந்த ஐந்து கோள்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
ஐந்து புதிய கோள்களுக்கும் வாஸ்ப்-- 119 பி, வாஸ்ப் -- 124 பி, வாஸ்ப் --
126 பி, வாஸ்ப் - -129 பி மற்றும் வாஸ்ப்-- 133 பி என்று அவர்கள்
பெயரிட்டுள்ளனர். இவை ஐந்தும், சூரியனைப் போலவே உள்ள நட்சத்திரங்களை
மையமாகக் கொண்டு வலம் வருகின்றன. ஐந்து கோள்களுமே, மிகவும் வெப்பமானவை
என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அந்த கோள்கள், தாம் சார்ந்துள்ள
நட்சத்திரங்களை வலம் வர, 2.17 முதல், 5.75 நாட்கள் எடுத்துக் கொள்வதாக,
கீல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து கோள்களும்
வலம் வரும் நட்சத்திரங்கள், சூரியனுக்கு சமமான நிறை கொண்டவையாக இருக்கலாம்.
அவற்றின் வெப்பம் மற்றும் அடர்த்தியை வைத்துப் பார்க்கையில், அவை சூரியனை
விட அதிக வயதுள்ளதாகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
வியாழனைவிட நிறை குறைவாக உள்ள வாஸ்ப்--124 பி என்ற கோள், தான் சார்ந்துள்ள
நட்சத்திரத்தை வலம் வர, 3.4 நாட்கள் ஆகிறது.
விஞ்ஞானிகள்
கண்டுபிடித்த ஐந்து கோள்களில், வாஸ்ப் - 126 பி கோள் தான் மிகவும் நிறை
குறைவானது. இந்த கோளின் மேற்பரப்பில் ஈர்ப்பு விசையும் குறைவு. மேலும், அது
வலம் வரும் நட்சத்திரமும் பிரகாசமாக ஒளிவிடுகிறது. ''இதனால்
பூமியிலிருந்தபடியே மேலும் ஆராய்ச்சிகள் செய்து, அதன் வளிமண்டலம், அதிலுள்ள
வளங்கள் போன்றவற்றை ஆராய்வதற்கு வாஸ்ப் - -126 பி கோள் தோதானதாக
இருக்கும்,'' என்று கீல் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவைச் சேர்ந்த, கோயெல்
ஹெல்லியர் தெரிவித்தார்.