புதிய வாக்காளர் சேர்க்க வாய்ப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


தமிழகத்தில் இன்று (ஜன.,20) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பு வந்த பின் புதிய வாக்காளர்கள், 'ஆன் லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்,'' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 82 ஆயிரம் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் தேவை. இதில் 8,000 இயந்திரங்கள் மட்டுமே இருப்பு உள்ளன. குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்படும். இவை பழுதாகி உள்ளதா என்பது குறித்து பிப்.,1 முதல் மார்ச் 10 வரை 'பெல்' நிறுவனம் சரிபார்க்கும்.
தமிழகம் முழுவதும் இன்று (ஜன.,20) காலை 10.00 மணிக்கு கலெக்டர்கள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவர். புதிய வாக்காளர்கள் அலைபேசி எண் குறித்து விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தால், அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். புதிய வாக்காளர்களுக்கான அடையாள அட்டை அச்சிடும் பணி துவங்கி உள்ளது. அவை இம்மாதத்திற்குள் வழங்கப்படும்.புதிய வாக்காளர் சேர்க்கை அறிவிப்பு வந்த பின், 'ஆன் லைனில்' மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புகார்கள் குறித்து தெரிவிக்க அலைபேசி எண் வழங்கப்படும். புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலுக்கு கட்சியினர் மற்றும் பிறர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அனுமதி பெற, 'ஆன் லைனில்'மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் வாகனம், உரிமையாளர், பயன்படுத்தும் கட்சி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக பெறலாம், என்றார்.