தமிழ் பாடத்திற்கு முன்பயிற்சி விடுமுறை கிடைக்குமா?

சமீபத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதைப்பார்த்த தமிழ் அய்யாக்களின், அம்மாக்களின் முகத்தில் ஆடவில்லை.  ஆம்! அவர்கள் முகம் எள்ளும் கொள்ளுமாக வெடித்தது! அப்படி என்ன ஆயிற்று அவர்களுக்கு? என்ற கேள்வி எழத்தானே செய்யும்.
          ஏற்கெனவே சென்ற ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தமிழில் எதிர்பார்த்ததைவிட அதிகம்பேர் ஆயிரக்கணக்கில் தோல்வி!. அதிக போர்ஷன், இரண்டு தாள்கள் எனக் காரணம் கூறப்பட்டாலும், அதிக தோல்வி என்பது தவிர்க்க இயலாத ஒன்று.  அதில் மாணவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்பதே ஆசிரியர்களின் தரப்புவாதம். ஆசிரியர்கள் மீதுதான் தவறு என்கிறது அரசின்வாதம். இந்தக் குடுமிபிடிச்சண்டையை விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?
         போயும் போயும் தமிழில் பெயிலா? என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் தமிழாசிரியர்கள்? என்ற கேள்வி வருடாவருடம் எழச்செய்வதையும் தவிர்க்கவில்லை. என்னதான் செய்யவில்லை நாங்கள்? என்கிற தமிழாசிரியர்களின் பதிலையும் தவிர்க்கவில்லை.
            வருகிற மார்ச் மாதம் நடைபெறும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழில் அதிக விழுக்காடு தரவேண்டும் என்றால், முதல் தாளிற்கும் இரண்டாம் தாளிற்கும் இடையே கொஞ்சமாவது இடைவெளி வேண்டும்.  இல்லையேல், முதல் தாள் நடத்துவதற்கு முன்பாக நாட்களை ஒதுக்கவேண்டும்.  இந்த இரண்டும் செய்யாமல், ஆங்கிலம் முதல் தாளிற்கு 5 நாளும், ஆங்கிலம் இரண்டாம் தாளிற்கு 5 நாளும், கணிதத்திற்கு 5 நாளும், அறிவியலுக்கு 2 நாளும், சமூக அறிவியலுக்கு 3 நாளும் விடுமுறை அளிக்கப்படுகிறது.  அதாவது தமிழைத் தவிர மற்ற பாடங்களிற்குத் தேர்வு முன்பு பயிற்சி அளிக்க குறைந்தது 3 நாட்களாவது இடைவெளி இருக்கிறது. 
                வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! என்று கோஷம் போடமட்டுமே தெரிந்தவர்களுக்குத் தமிழ் முதல் தாளிற்கும், இரண்டாம் தாளிற்கும் இடைவெளி விடவேண்டும் என்பது மட்டும் ஏன் தெரியவில்லை?
                 மார்ச் 15 செவ்வாய்  அன்று முன்பாக உள்ள 14 ஆம்தேதி பயிற்சி அளிக்கலாம் என்றால், மாணவர்கள் துணி துவைத்தல், தேர்வு அறைகளைப் பராமரித்தல் என முடிந்துவிடும். அதற்கு முன்பாக ஞாயிறு என்றால், “சார் ஞாயிறு ஸ்கூல் வெக்காதீங்க! பிரச்னை ஏதாவது வரும்? என்று பயமுறுத்தும் சக ஆசிரியர்கள்.  அதற்கு முன்பாக சனியன்று வைக்கலாம் என்றால் மற்ற ஆசிரியர்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். சனிக்கு முன்பாக உள்ள நாட்களைக் கேட்டால் , நாங்கள் என்ன செய்வது? என்பார்கள் மற்ற ஆசிரியர்கள்.  இப்படி இப்படி சோதனை மேல் சோதனை வந்தால் தமிழாசிரியர்கள் எப்படி பயிற்சி அளிப்பார்கள்? ரிசல்ட் கொடுப்பார்கள்?
எனவே அரசு என்ன செய்யவேண்டும்?
                 ஒவ்வொரு பாடத்திற்கும் இடையே குறைந்தது 3 நாட்கள் விடுமுறை  உள்ளது. தமிழுக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது.  மற்ற பாட “நல்லாசிரியர்கள்” பெருந்தன்மையுடன் மற்ற நாட்களை,  “தேர்வு வந்துவிட்டது” என்று சொல்லி விட்டும் கொடுக்கமாட்டார்கள். 
               எனவே, பத்தாம் வகுப்புத் தேர்வை முன்னிட்டு, மார்ச் 9,10 – தமிழ் முதல் தாளிலும், மார்ச் 11, 12 – தமிழ் இரண்டாம் தாளிலும் பயிற்சி அளிக்க, அனைத்து வகை அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளுக்கு அரசு உத்தரவிடவேண்டும். இதை செய்தால் ஒழிய, தமிழ் ஆசிரியர்களிடம் தேர்ச்சி சதவீதத்தை அதிகம் எதிர்ப்பார்ப்பது தவறிவிடலாம். 
என்ன பாவம் செய்தார்களோ தமிழ் அய்யாக்களும்! அம்மாக்களும்!
 Article by Tamil Teachers.