முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு

திண்டுக்கல்:முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் தேவையுள்ள ஆசிரியர்கள், பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டு பெற்றுள்ளது.
அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 முதல் 50 பணியிடங்கள் தேவையுள்ளதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன.

நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்தது. இதில் திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் முதுநிலை ஆசிரியர் காலியிடங்கள் குறைவாகவே இருந்தன. இதனால் பெரும்பாலானோருக்கு வடமாவட்டங்களில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. சிலர் வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் பதவி உயர்வை மறுத்துள்ளனர். இதையடுத்து புதிய பணியிடங்கள் அறிவிக்கும் போது மீண்டும் கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணதாஸ் கூறியதாவது: முதுநிலை ஆசிரியர் புதிய பணியிடங்களை அறிவிக்காமல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தியதால் பல ஆண்டுகளாக பணிபுரிந்தோர் வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். எனவே புதிய பணியிடங்கள் அறிவித்ததும் பாதிக்கப்பட்டோருக்காக மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டும், என்றார்.