3 தமிழக பல்கலைக்கு அங்கீகாரம் ரத்து

விதிகளை மீறி செயல்பட்டதாக, தமிழகத்தில், அண்ணாமலைப் பல்கலை, தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலை உட்பட, நாடு முழுவதும், 31 பல்கலைகளின் அங்கீகாரத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.அஞ்சல் வழியில், தொலை நிலை பட்டப்படிப்புகளை
நடத்தும் பல்கலைகளை, இதுவரை தொலை நிலை கல்வி கவுன்சில் கண்காணித்து வந்தது. இதில் பல புகார்கள் வந்ததால், இந்த கவுன்சில் கலைக்கப்பட்டு, யு.ஜி.சி.,யின் நேரடி கட்டுப்பாட்டில் தொலை நிலை கல்வி அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் மூலம், திறந்தவெளிப் பல்கலைகளின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, விதிகளை மீறும் பல்கலைகளின் அங்கீகாரம், தயவு தாட்சண்யமின்றி ரத்து செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், மூன்று பல்கலைகள் உட்பட, நாடு முழுவதும், 31 பல்கலைகளுக்கு, தொலை நிலை கல்வி வழங்குவதற்கான அங்கீகாரத்தை, யு.ஜி.சி., ரத்து
செய்துள்ளது.இதுகுறித்து, ராம் பிரசாத் சர்மா, விஜய்குமார் ஹன்ஸ்தக் ஆகிய எம்.பி.,க்கள், லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதிலில், இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழகத்தில், அண்ணாமலைப் பல்கலை, தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலை மற்றும் தக் ஷின் பாரதி இந்திப் பிரசார சபா ஆகியவற்றுக்கான தொலை நிலை கல்வி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது' என, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பல்கலைகள் தரப்பில் கேட்டபோது, 'பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தி, தொலை நிலை கல்வி அளித்து வருகிறோம். தற்போது, யு.ஜி.சி.,க்கு மீண்டும் விண்ணப்பித்து, குறைகளை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டுள்ளோம். எனவே, மாணவ, மாணவியர் அச்சப்பட வேண்டாம்' என்றனர்.வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கியுள்ளதால், விண்ணப்பங்களை வழங்குவதா, வேண்டாமா என அங்கீகாரம் ரத்தான பல்கலைகள் குழப்பத்தில் உள்ளன