அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் அறிவித்தது.இதுகுறித்து மன்றத்தின்
பொதுச் செயலாளர் சிவராமன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.அதாவது, கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஓய்வு பெறுவது, புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட காரணங்களால் 82 அரசுக் கல்லூரிகளிலும் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட 14 அரசுக் கல்லூரிகளில் காலிப் பணியிட நிலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், 24 அரசுக் கல்லூரிகளில் முழு நேர முதல்வர்கள் நியமிக்கப்படாமல், பொறுப்பு முதல்வர்களே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 1026 உதவிப் பேராசிரியர்களுக்கு, இன்னும் பணி நியமன ஆணைகளும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால், கல்லூரிகளில் நிர்வாகப் பணிகள் மட்டுமன்றி, கல்வியும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால், பணி மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும், காலியாக உள்ள 5 மண்டல இணை இயக்குநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மன்றம் முடிவு செய்துள்ளது என்றார்.