அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவக்கம்

சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது.கலந்தாய்வை, நேற்று காலை, 9:00 மணிக்கு, துணைவேந்தர் மணியன் துவக்கி வைத்தார். பொறியியல் தர வரிசை பட்டியலில், 194.75 'கட் - ஆப்'
மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்ற, புவனகிரியைச் சேர்ந்த அருள்வேல் என்ற மாணவர், சிவில் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்தார்.அடுத்ததாக, 194.50 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம் பிடித்த, அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதுாரக் கல்வி இயக்குனர் சந்திரசேகர் மகள் மீரா, சிவில் இன்ஜினியரிங், 193.50 'கட் - ஆப்' பெற்று மூன்றாம் இடம் பிடித்த, கடலுார், செம்மண்டலம் அமரன் மகன் ஆகாஷ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பையும் தேர்வு செய்தனர். இவர்களுக்கு சேர்க்கை அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.நிருபர்களிடம் துணைவேந்தர் மணியன் கூறியதாவது:பொறியியல் படிப்பிற்கு, 2,201 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 75 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக்கான அனுமதி கடிதம் பெற்றவர்கள், ஜூலை 8ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்தாண்டு பொறியியல் படிப்பில் சேரும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்துள்ளது. எனவே, எங்கள் பல்கலைக்கழகத்திலும், மாணவர்கள் சேர்க்கை குறைவாகத்தான் இருக்கும்.
இருப்பினும், இரண்டாவது கலந்தாய்வு நடத்தப்படும். இதிலும், மாணவர்கள் சேர்க்கை முழுமை பெறவில்லையெனில், வெளி மாணவர்கள் தகுதி அடிப்படையில் சேர்க்கப்படுவர்.
மருத்துவம், பல் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைக்கு அதிகளவு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 28ம் தேதி, (இன்று) தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு, ஜூலை 1ம் தேதி துவங்குகிறது.இந்தாண்டு மருத்துவப் பிரிவில், 150 இடங்களுக்கும், பல் மருத்துவத்தில், 80 இடங்களுக்கும் சேர்க்கை நடத்தப்படும்.இவ்வாறு துணைவேந்தர் மணியன் கூறினார்.