எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு 1,153 இடங்கள் நிரம்பின

சென்னை: மூன்று நாள் நடந்துள்ள மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில், 1,153 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பியுள்ளன. ஒருவர் மட்டுமே, பி.டி.எஸ்., படிப்பை எடுத்து உள்ளார்.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. பொது பிரிவுக்கான, இரண்டாம் நாள் கலந்தாய்வு நேற்று நடந்தது.
அழைக்கப்பட்ட, 588 பேரில், எட்டு பேர் தவிர, 580 பேர் பங்கேற்றனர். இவர்களில், 546 பேர் அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், 29 பேர், சுயநிதி கல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., இடங்கள் பெற்றனர்.

மூன்று நாட்கள் கலந்தாய்வில் இடங்கள் பெற்ற, 1,154 பேரில், ஒருவர் மட்டுமே, பி.டி.எஸ்., எடுத்துள்ளனர்; மற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., எடுத்துள்ளனர்.அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 1,118; சுயநிதி கல்லுாரிகளில், 567 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில், 84 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இன்றைய கலந்தாய்விற்கு, 650 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.