குரூப் 1பதவிக்கு 10நாளில் தேர்வு அறிவிப்பு

குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும். குரூப்1 பதவிக்கு இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
 
           தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக்கெழுத்து தட்டச்சர்-331, வரித் தண்டலர்-22, வரைவாளர்-53, நில அளவர்-702 உள்ளிட்ட 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த டிசம்பர் 21ம் தேதி நடத்தியது. இதில், மதிப்பெண், தரவரிசை நிலை அடிப்படையில் 7,030 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

            இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று காலை சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற இடத்திற்குள் தேர்வாளர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு பணியை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் அளித்த பேட்டி: சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒவ்வொரு நாளும் 200 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சான்றிழ் சரிபார்ப்பு பணி நடைபெறாது. குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர்(19 இடம்), போலீஸ் டிஎஸ்பி- 26, வணிகவரித்துறை உதவி ஆணையர்- 21, மாவட்ட பதிவாளர்- 8 உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியிடப்படும். அதே போல, நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள இன்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார். இன்ஜினியர் ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய 98 இன்ஜினியர் பணியிடத்துக்கான ரிசல்ட் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியம் கூறினார்.