டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் குழப்பம் தீர்க்க தகவல் மையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், பார்வை யாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் சந்தேகங்களைத் தீர்க்க, புதிய தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது.


கடந்த, நான்கு ஆண்டு களாக புகார்களுக்கு இடமின்றி, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை கள் அமைந்துள்ளன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி.,யில் பணியாற்றும் அதிகாரிகளை மட்டுமின்றி, தலைவர், செயலர், பதிவாளர், உறுப்பினர்கள் என, பலரையும் நேரில் பார்த்து, பணி நியமனங்களுக்கு சிபாரிசு கேட்க பலர் முயற்சிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், வெளியாட்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்படும் போது, அதில் முழு விவரங்கள் இடம் பெறுவதில்லை.அதனால், தேர்வர்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்துக்கு நேரில் செல்கின்றனர். நேரிலும், அவர்களால் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளது.இதைக் கருத்தில் கொண்டு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் தேர்வர் தொடர்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

இதில், பல்வேறு தேர்வுப்பணி அனுபவம் பெற்றவர்களை, தேர்வர் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.