மேடையாகும் வகுப்பறை; ஆசிரியராக மாணவர்கள் - கற்பித்தலில் புதுமையை புகுத்தும் அரசுப் பள்ளி

வகுப்பறையை மாணவர்கள் நேசிக்கும் இடமாக மாற்றினால், கல்வியில் அவர்கள் கரைந்து விடுவார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலையுடன் கல்வியை மாணவர்கள் மூலம் போதித்து அசத்தி வருகின்றனர்.

இப்பள்ளி சென்னை மாகாண சமுதாய நலத்திட்ட இயக்குநரால் கடந்த 1955-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். தனது நீண்ட பாரம்பரியத்தில் பல ஆசிரியர்களை கண்ட இப்பள்ளி தற்போது புதுப்பொலிவுடனும், கல்வி மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படும் வகையான கற்றல் முறையை பின்பற்றி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் இப்பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் சு. விஜயராகவன்.
கல்வியில் ஆர்வம்
‘அரசுப் பள்ளி மாணவர்கள் பல்வேறு குடும்ப சூழல்களில் இருந்து பள்ளிக்கு வருகின்றனர். அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வம் வர வேண்டும்; கல்வியும், கற்பித்தலும் இனிமையாக இருந்தால் அவர்களின் எதிர்காலம் பிரகாசிக்கும் என்று நினைத்தோம்.
ஊரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் மக்களோடு சேர்ந்து பேசினோம். முதல்கட்டமாக பரத நாட்டியமும், கர்நாடக சங்கீத பயிற்சி யும் அளித்தபோது, கலைகளின் மேல் மாணவர்களுக்கு உள்ள ஆர்வ மும், விருப்பமும் எங்களை கவர்ந்த தால், புதிய கற்பித்தல் முறையை உருவாக்கினோம்’ என்றார் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராகவன்.
திரைசீலையுடன் மேடை
வகுப்பறையில் திரைச்சீலை யுடன் கூடிய ஒரு மேடை. மேடையை சுற்றிலும் வண்ண விளக்குகள். மாணவர்கள் பேசுவதற்கும் அதனை ஒலிபரப்புவதற்கும் கருவி கள். பள்ளியின் முகப்பில் இரு ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டு, வகுப்பறையில் நடக்கும் பாடம் முழுவதும் கிராம மக்கள் கேட்கும் வசதி என வகுப்பறை என்பது ஒரு விழா மேடையாக காட்சியளிக்கிறது.
முதல் வகுப்பில் தொடங்கி 5-ம் வகுப்பு வரை 50 மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க, வில்லுப்பாட்டு, நாடகம், பட்டிமன்றம், இரு குழு பாடல், கருத்தாடல், உரையாடல், விநாடி - வினா, தலைப்பு - விளக்கவுரை என பல வடிவங்களில் அனைத்து பாடங்களையும் கலைநயத்தோடு அசாத்தியமாய் ஒப்புவிக்கின்றனர் மாணவர்கள்.
ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை அறுவை என்று ஒதுக்கும் மாணவர்கள்கூட, தங்கள் சகாக்களே ஆசிரியர்களாக மாறி கலையுடன் கூடிய போதனை வழங்குவதால் உற்சாகமாகின்றனர்.
மெத்தப்படித்தவர்களே மேடை யில் ஏறி ஒலிப்பெருக்கிகளில் பேச நடுங்கும் சூழலில், குட்டிசெல்லங்களான மாணவர்கள் பாடங்களை அழகாய் ஒலிப்பெருக்கி கள் மூலம் அரங்கேற்றுகின்றனர். ஏறக்குறைய அனைத்து பாடங் களையும் வரி விடாமல் சொல்லி, தேர்வில் சதமடிப்பதை உறுதி செய்கின்றனர்.
பல வடிவங்களில் போதனை
நான்காம் வகுப்பு, 5-ம் வகுப்பு பாடங்களை வில்லுப்பாட்டாக அந்த வகுப்பு மாணவர்கள் பாட, அதனை கேட்ட முதல் வகுப்பு மாணவர்களும் அப்படியே ஒப்புவித்து, கற்பிக்கும் முறைக்கு கிடைத்த வெற்றியை வெளிப்படுத்துகிறது.
‘பாடத்தின் கருவைக் கொண்டு அதை நாடகமாக, உரையாடலாக, வில்லுப்பாட்டு என பல வடிவங்களில் உருவாக்கியுள்ளோம். ஆசிரியை சசிகலா மற்றும் அருகாமையில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கார்த்திகேயன், இளஞ்செழியன், சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் இதனை வடிவமைக்க உதவினர்.
விடுமுறை எடுப்பதில்லை
கடந்த ஜனவரி முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்த வகுப்புகள் வழக்கமான வகுப்புகள் தொடங்கும் முன் காலையும், மாலையும் அரை மணிநேரம் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு பாடங்களை இந்த முறையில் கற்பிக்கிறோம்.
பாடத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் விடுமுறைகூட எடுக் காமல் மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகின்றனர். இதன் மூலம் மாணவர்களின் ஞாபகசக்தி நன்கு வளர்ந்துள்ளது. பள்ளிக்கு வெளியே ஒலிப்பெருக்கி வைக்கப் பட்டுள்ளதால், மாணவர்கள் பாடி, நடித்து பாடம் கற்பதை அவர்கள் பெற்றோர் வீட்டிலிருந்து கேட்டு மகிழ்ச்சியடைகின்றனர்’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார் விஜயராகவன்.