ஜிப்மர் மருத்துவ நுழைவுத்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பம்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 150 எ
ம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 7–ந் தேதி 50 நகரங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.
பிளஸ்–2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, நாகர்கோவில், திருச்சி, தூத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் மற்றும் புதுவையில் நுழைவுதேர்வு நடக்கிறது.
ஆன்லைன் மூலம், மே மாதம் 4-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பொது பிரிவு, ஓ.பி.சி., ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு பிரிவினர்கள் ரூ.800 செலுத்த வேண்டும்.
ஜிப்மர் நுழைவு தேர்வு மொத்தம் 200 வினாக்கள் என்ற வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜிப்மர் நுழைவு தேர்வுக்கு, கடந்தாண்டு 90 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்தாண்டு ஒரு லட்சம் மாணவர்கள் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு ஜிப்மர் இணையதளத்தை பார்க்கலாம்.