பி.எப். திட்டத்தில் சேருவது பற்றி பணியாளர்கள் விருப்பம் போல முடிவு
செய்து கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி கூறியதாவது:
பணியாளர்கள் சேமநல நிதி (பி.எப்.) திட்டத்தில் சேருவது குறித்து தங்கள்
விருப்பம் போல முடிவு செய்து கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு
வருவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக ஆலோசனை களுக்கு பிறகு பி.எப். சட்டத்தில் திருத்தங்கள்
செய்யப்படும்.பி.எப். திட்டத்தில் சேருவதற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய
திட்டத்தில் பணியாளர்கள் சேர்ந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட தொகைக்கு கீழே பணியாளர்களின் சம்பளம் இருந்தால் அவர்களுக்கு
பி.எப். திட்டத்தில் பங்களிப்பு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கவும் அரசு
திட்டமிட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம்
பி.எப். கணக்குக்கு சென்று விடுகிறது. இதில் 8.33 சதவீதம் பணியாளர்
ஓய்வூதிய திட்டத்துக்கு செல்கிறது.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.
‘பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின்
பொதுச் செயலாளர் எம்.துரைப்பாண்டியன், ‘‘சேமநல நிதியில் சேருவது
கட்டாயமில்லை என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக சேரும் அரசு
ஊழியர்களுக்கு சேமநல நிதி (பி.எப்.) பிடித்தம் செய்யப்படுவதில்லை. பழைய
ஊழியர்களுக்கே சேமநல நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, இந்த
அறிவிப்பால் அரசு ஊழியர்களுக்கு எவ்வித சாதகமோ, பாதகமோ இல்லை. அதே சமயம்,
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அவர்கள் சேமநல நிதியில் பணம் கட்டினால்தான், அதனடிப்படையில் அவர்களுக்கு
ஓய்வூதியம் வழங்கப்படும். இப்புதிய அறிவிப்பால் அவர்களுக்கு சேமிப்பு
தடைப்படும். மேலும், இந்த அறிவிப்பு தனியார் நிறுவன முதலாளிகளுக்கு சாதகமாக
அமையும்’’ என்றார்.