டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்–2 மெயின்தேர்வு முடிவு அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியன் தகவல்

குரூப்–2 மெயின்தேர்வு முடிவு அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சான்றிதழ் சரிபார்த்தல் 2013–2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் உள்ள 162 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதற்காக, விண்ணப்பங்கள் பெற்று எழுத்துத்தேர்வு கடந்த நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெற்றது. பின்னர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள 590 பேர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்த்தலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் பார்வையிட்டார். இந்த சான்றிதழ் சரிபார்த்தல் 11–ந்தேதி வரை நடக்கிறது.
அதே வளாகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது. அதையும் தலைவர் பாலசுப்பிரமணியன் பார்வையிட்டார். அதாவது 17 காலிப்பணியிடங்களுக்கு 42 பேர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த சான்றிதழ் சரிபார்த்தல் நேற்று ஒரு நாள் மட்டும் நடந்தது.
அப்போது தலைவர் சி.பாலசுப்பிரமணியத்திடம் நிருபர்கள் கேட்டகேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
குரூப்–2 மெயின்தேர்வு முடிவு குருப்–2 (நேர்முகத்தேர்வு கொண்டது) தேர்வு வணிகவரி துணை அதிகாரி, சப்–ரிஜிஸ்டர் –நிலை 2, உதவி தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, சிறப்பு உதவியாளர், ஆடிட் ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளில் காலியாக உள்ள 1064 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது.
அதன் முடிவு வெளியிடப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை கடந்த நவம்பர் மாதம் எழுதினார்கள். மெயின்தேர்வு முடிவுவெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன எப்படியும் ஒருவாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் முடிவு வெளியிடப்படும். பிறகு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
45 நாட்களில் வெளியீடு குரூப் 4– தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 22–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 10 லட்சத்து 50ஆயிரம் பேர் எழுதினார்கள். தற்போது விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடந்துவருகிறது. முடிவு வெளியிட 45 நாட்கள் ஆகும்.
இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.