ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்று நாள்கள் யோகா பயிற்சி

மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மூன்று நாள்களுக்கு ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு
யேகாசன வகுப்புகள் நடைபெறவுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு யோகாசனம் கற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழகமெங்கும் சென்னை, நீலகிரி, தஞ்சை, மதுரை ஆகிய நான்கு பகுதிகளில் வகுப்புகள் நடைபெறுகிறது.
மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாத புரம் உள்ளிட்ட 12 தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் 106 பேர் பங்கேற்கின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்களுக்கு யோகாசன வகுப்புகள் நடைபெறுகிறது. வகுப்புகள் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.
யேகாசனப் பயிற்சியை யோகிராஜ் ராமலிங்கம், கருணாகரன், ஜெகஜோதி, காந்திமதி ஆகியோர் அளிக்க உள்ளதாகவும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்வதாகவும் மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன் தெரிவித்தார்.