பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'தத்கல்' திட்டத்தில் வாய்ப்பு

சென்னை: 'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வு கள் துறை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து, இயக்குனர் தேவராஜன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: மார்ச் மாதம் நடக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன் - லைனில் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் உள்ள சேவை மையத்திற்கு, நாளை முதல் 7ம் தேதிக்குள், நேரில் சென்று ஆன் - லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பிப்பவர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்; தனியார் பிரவுசிங் மையங்களில் விண்ணப்பிக்க இயலாது. மேலும், ஏற்கனவே ஆன் - லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், 'ஹால் - டிக்கெட்' பெற, இன்றே கடைசி நாள். கடந்த 2ம் தேதி முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதுவரை, பதிவிறக்கம் செய்யாதவர்கள், www.tndge.in என்ற தேர்வுத் துறை இணையதளத்தில், இன்றைக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.