தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வை 8.43 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்


சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 5–ந்தேதி தொடங்கும் பிளஸ்–2 தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், மார்ச் 19–ந்தேதி தொடங்கும்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு பிளஸ்–2 தேர்வுகள் மார்ச்–5–ந்தேதி தொடங்கி மார்ச் 31–ந்தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 19–ந்தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 10–ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பிளஸ்–2 தேர்வுகள் 6 ஆயிரத்த 256 பள்ளிகளிலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் 11 ஆயிரத்து 827 பள்ளிகளிலும் நடக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வை 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகள் உள்பட 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேரும், எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்களும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதுகின்றனர்.
தனித்தேர்வர்கள் இதில் பிளஸ்–2 தேர்வை 42 ஆயிரத்து 963 பேரும், எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 50 ஆயிரத்து 429 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ்–2 தேர்வு 2 ஆயிரத்து 377 மையங்களிலும், எஸ்.எஸ்.எல்.சி, தேர்வு 3 ஆயிரத்து 298 மையங்களிலும் தேர்வு நடக்கிறது.
சென்னையில் மட்டும் பிளஸ்–2 தேர்வுகள் 412 பள்ளி மாணவர்கள், 144 மையங்களிலும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளை 578 பள்ளி மாணவர்கள், 209 தேர்வு மையங்களிலும் எழுதுகின்றனர். சென்னையில் பிளஸ்–2 தேர்வுகளை 24 ஆயிரத்து 653 மாணவர்களும், 28 ஆயிரத்து 750 மாணவிகளும் எழுதுகின்றனர். அதேபோல் சென்னையில் எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 28 ஆயிரத்து 124 மாணவர்களும், 29 ஆயிரத்து 230 மாணவிகளும் எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் தேர்வு புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வுகளை 128 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 33 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி, தேர்வுகளை 291 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 48 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வுகளை 6 ஆயிரத்து 575 மாணவர்களும், 7 ஆயிரத்து 731 மாணவிகளும் எழுதுகின்றனர். அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 ஆயிரத்து 703 மாணவர்களும், 9 ஆயிரத்து 856 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். மொத்தமாக தமிழ் வழியில் பிளஸ்–2 தேர்வை 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேரும், எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 7 லட்சத்து 30 ஆயிரத்து 590 பேரும் எழுதுகின்றனர்.
சிறைகளில் தேர்வு மையம் பிளஸ்–2 பொதுத் தேர்வினைப் பொறுத்தவரை பள்ளி மாணவ, மாணவியர்களில், சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 16,947 மாணவ, மாணவியர்களும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 33 ஆயிரத்து 816 மாணவ, மாணவிகளும் தேர்வெழுதுகின்றனர்.
சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறையிலேயே கடந்த சில வருடங்களாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மேல்நிலைத் தேர்வினை 77 சிறைவாசிகள் புழல் மத்தியச் சிறையில் தேர்வெழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வினைப் பொறுத்தவரை 33 சிறைவாசிகள் பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலும், 97 சிறைவாசிகள் கோவை மத்தியச் சிறையிலும், 111 சிறைவாசிகள் புழல் மத்தியச் சிறையிலும் தேர்வெழுதுகின்றனர்.
உடல் ஊனமுற்றோர்கள் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல்வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு மற்றும் சுடுதல் ஒரு மணிநேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேர்வு மையங்களின் தரைத்தளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே, நான்கு சக்கர வாகனங்களில் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் அதே வாகனங்களில், விடைத்தாள் கட்டுகளை, மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிரமம் தவிர்ப்பு இதனால், வினாத்தாள் உறைகளை மையங்களுக்குக் கொண்டு சேர்த்தல், விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றில் துறைக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் இடர்பாடுகள் பெருமளவில் தவிர்க்கப்படும்.
வினாத்தாள் கட்டுக் காப்பீட்டு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் குழு ஏற்படுத்தப்பட்டு கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
தேர்வு மையம் கண்காணிப்பு தமிழ்நாடு முழுவதிலும், பிளஸ்–2 பொதுத் தேர்விற்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும். பத்தாம் வகுப்பு. பொதுத் தேர்விற்கு 5,200–க்கும் மேற்பட்டவர்களும் பறக்கும்படை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு, தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்பணியில் ஈடுபடும் பணி மூத்த முதுகலை ஆசிரியர்கள், பள்ளி உதவி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையங்களை தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையின் அரசாணையின்படி அனைத்து இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களும் தேர்வு முடியும் நாள் வரை, தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில், கண்காணிப்புப் பணியினை மேற்கொள்ள உள்ளனர். முக்கியப் பாடங்களுக்கு, அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் அடங்கிய மேற்பார்வை குழுவினர் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் சிறப்புப் பார்வையாளர்களாகக் கண்காணிப்புப் பணியினை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.