வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மின்னணு ஓட்டு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள், மின்னணு முறையில் ஓட்டளிக்க, தேவையான ஏற்பாடுகளை எட்டு வாரங்களுக்குள் செய்து தர, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஓட்டளிக்க, கடந்த, 2010ம் ஆண்டு, மத்திய அரசு, அனுமதி வழங்கியது. எனினும், அவர்கள் தேர்தலின் போது, நேரடியாக தங்களது தொகுதிக்கு வந்து ஓட்டளிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. இதை எதிர்த்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில், பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, கருத்து தெரிவித்த தேர்தல் கமிஷன், பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், மின்னணு முறையில் மற்றும் பிரதிநிதிகள் மூலம் ஓட்டளிக்க அனுமதிக்கலாம் என, பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்று கொள்வதாக, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த மத்திய அரசு, தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தது. அதன் அடிப்படையில், எட்டு வாரங்களுக்குள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் ஓட்டளிக்க, தேவையான ஏற்பாடுகளை செய்து தர, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் பயனாக, 1.10 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்கள், இருந்த இடத்தில் இருந்தே ஓட்டளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.