கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும்: சிஐடியு அறிவிப்பு

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தொடங்குவதாக இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, இன்றே பல இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். பணிமனை வாயில்களில் பேருந்துகளை இயக்காமல் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும்: சிஐடியு அறிவிப்பு இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, விரைந்து அரசு நடவடிக்கை எடுத்து போராட்டத்தை வாபஸ் பெற செய்ய வேண்டும் என கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று மீண்டும் சென்னையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இணைந்து ஆலோசனை நடத்தின. அதன் முடிவில் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தொழிற்சங்கத்துடன் அரசு உடனடியாக பேச்சு நடத்த முன்வரவேண்டும் எனவும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக சிஐடியு சவுந்தரராஜன் கூறுகையில், ‘இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழக அரசே காரணம். தமிழகம் முழுவதும் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. வழக்கு நிலுவையை காரணம் காட்டி அரசு பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கிறது. வேலைநிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.