தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 70 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்.

8 பதக்கம் பெற்ற முதல் மாணவி

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கவர்னர் கே.ரோசய்யா தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். வேலூர் ஆக்ஸிலியம் ஆசிரியர் கல்வியில் கல்லூரி பி.எட். மாணவி எஸ்.நித்யா 8 பதக் கங்களை பெற்று பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்றார்.

2-வது இடத்தை மதுரை மங்கையற்கரசி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி சபரிஷா பெற்றார். இவர்கள், பிஎச்.டி. மாணவர்கள் உள்பட 74 பேர் நேரடியாக வந்து பட்டம் பெற்றனர்.

விழாவுக்கு வராமல் விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் 69 ஆயிரத்து 399 மாணவ-மாணவிகளுக்கும் பட்டம் கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மொத்தத்தில் 69 ஆயிரத்து 433 பேர் பட்டம் பெற்றனர்.

உயர்கல்வி படிப்போர் சதவீதம் உயர்வு

விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பேசுகையில் தமிழ்நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு உயர்கல்வி மாணவர் சேர்க்கை 38.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.

தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.கோவிந்தா கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர் பணி சவால் மிகுந்தது. செல்போன், இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால் அவற்றை எளிதில் மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே ஆசிரியர்கள் வகுப்பு பாடத்துடன் நின்றுவிடாமல் மாணவர்களை அறிவு மிகுந்தவர்களாக ஆக்க வேண்டும். ஆசிரியர்கள் அவ்வப்போது புதிய புதிய தொழில்நுட்பங்களையும், புதிய பாடங்களையும் படித்து தெரிந்து அவற்றை மாணவர்களை கற்கவைக்க வேண்டும். எனவே சவால் மிகுந்த இந்த காலத்தில் திறமையான மாணவர்களை ஆசிரியர்களாக போகும் நீங்கள் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு ஆர்.கோவிந்தா பேசினார்.

வரவேற்பு

விழாவில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்கா, ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கெ.விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.

விழா நடைபெறுவதற்கு முன்பாக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் உள்ள ஒரு மின் விளக்கில் இருந்து மின்சார கசிவு காரணமாக புகை வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அரங்கில் உட்கார்ந்திருந்த மாணவ- மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

உடனடியாக தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அதை அணைத்தனர். பின்னர் மாணவ-மாணவிகள் அரங்குக்குள் உட்கார அனுமதிக்கப்பட்டனர்.