10-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றமா? தேர்வுத்துறை இயக்குநர் விளக்கம்

சென்னை,

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒன்றாகும். எனவே தேர்வுகள் சம்பந்தமான சரியான செய்திகள் மாணவர்களை சென்றடைவது மிக அவசியமானதாகும். தவறான செய்திகள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும். தவறான செய்திகளால் மனதளவில் மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

தேர்வுகள் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளுமே தேர்வுத்துறையால் அனைத்து மாவட்டங்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தேர்வுக்கால அட்டவணை போன்ற அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் மட்டும் பத்திரிகைகள், தொலைக்காட்சி வாயிலாக தெரிவிக்கப்படும்.

10-ம் வகுப்பு தேர்வுக்கால அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில் ஊகத்தின் அடிப்படையில் சில நாளிதழ்களில் தேர்வுக்கால அட்டவணை மாற்றப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியிடப்பட்டன. எனவே தேர்வுத்துறையால் அளிக்கப்படும் செய்திகளை மட்டுமே வெளியிடுமாறும், ஊகத்தின் அடிப்படையில் வெளியிடும் தவறான செய்திகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.