மாற்றுத் திறனாளிக்கும் வசப்படுமா ஐ.ஏ.எஸ்?

மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவரிடம் உரையாடுகிறார் அந்த ஆட்சியர். “உங்களைப் போன்று கலெக்டராவதுதான் என் லட்சியம். ஆனால், அதற்கு வசதிதான் இல்லை” என்று வேதனையைச்
சிரிப்பாக வெளிப்படுத்துகிறான் அந்த இளைஞன். அந்தச் சிரிப்பு ஏற்படுத்திய பாதிப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை மதுரையில் தொடங்கவைத்தது.
மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் சகாயத்தால் தொடங்கப்பட்ட இந்த மையம், இப்போதும் வெற்றிகரமாக இயங்கிவருகிறது. சொந்தக் கட்டிடம் இல்லாததால் 3 இடங்கள் மாறிய இந்த மையம், தற்போது மதுரை ஜவஹர்புரத்தில் வீரப்புலவர் காலனியில் செயல்பட்டுவருகிறது.
மையத்தின் மாலுமியாக
கால்நடைத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ராமகிருஷ்ணன் இந்த மையத்தின் மாலுமியாக இருக்கிறார். வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் இந்தப் பயிற்சி நடைபெறுவதால் படிக்கிற மற்றும் பணிபுரிகிறவர்களும் பயன்பெறுகின்றனர். இதுகுறித்து அவர் கூறியபோது, “ஆட்சியர் சகாயம் மீது எனக்குத் தனிப்பட்ட மரியாதை உண்டு. நீங்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு, நான் ஆரம்பித்த இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தைக் கவனித்துக் கொள்ள முடியுமா? என்றார். நானும் கண்டிப்பாகக் கவனிக்கிறேன் என்று உறுதியளித்தேன்.
மையம் அடிக்கடி இடம் மாறியதால் மாற்றுத் திறனாளிகள் வருகை குறைந்தது. எனவே, மாற்றுத் திறனாளிகள் மட்டுமின்றி அவர்களது குடும்ப அங்கத்தினரையும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள ஏழைகளையும் இந்த மையத்தில் சேர்க்க ஆரம்பித்தோம். இப்போது 25 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.
சகாயம் கனவு கண்டபடி ஒரு மாற்றுத் திறனாளியையாவது ஐ.ஏ.எஸ். ஆக்கிவிட வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம். அதற்காக நான் மட்டுமின்றி நிறைய ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் இங்கே இலவசமாகப் பயிற்சி அளிக்கிறார்கள். ஏற்கெனவே போட்டித் தேர்வுகளில் வென்றவர்கள், ஆசிரியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் வாரத்தில் ஒரு மணி நேரத்தை மட்டும் இந்த மாணவர்களுக்கு ஒதுக்க முன்வந்தால், மகிழ்ச்சியோடு வரவேற்போம்” என்றார்.