பணி பாதுகாப்பு வழங்கிட கோரி கறுப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணியாற்ற முடிவு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

புதுக்கோட்டை, : தமிழகத்தில் அனை த்து பள்ளி ஆசிரியர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு வழங்கிட கோரி தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி மேற்கொள்ள உள்ளனர். 

 இது குறித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் பிச்சைவேல் விடுத்துள்ள அறிக்கை: கோடம்பாக்கம் லயோலா தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் என்பவரை அப்பள்ளியில் பயின்ற 8ம் வகுப்பு மாணவர் அர்னால்டுவின் தந்தை அருளானந்தத்தின் தூண்டுதலின் பேரில் 100க்கும் மேற்பட்ட அடியாட்கள் பள்ளி வளாகத்திலேயே தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்தும், அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பணி பாதுகாப்பு வழங்கிட கோரியும், தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் இன்று (28ம் தேதி) கறுப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்று வழக்கமான கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.