எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களின் விவரத்தை இணையதளத்தில் வெளியிடவேண்டும் தனியார் கல்லூரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், ஜி.விஜயகுமார் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‘தனியார் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு தனியாக விளக்கக் குறிப்பேடு எதுவும்
வழங்குவதில்லை. எனவே நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெற்றிருக்கவேண்டிய மதிப்பெண், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமாக விவரங்களுடன் விளக்கக் குறிப்பேடு தயாரிக்கவும், மாணவர்கள் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறும் விதமாக அனைத்து விவரங்களையும் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தனியாக விளக்கக் குறிப்பேடு தயாரித்து வெளியிடவேண்டும். மேலும், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறும் விதமாக, கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தங்களது கல்லூரி இணையதளத்தில் வெளியிடவேண்டும்’ என்று கூறியுள்ளார்கள்.