நான்கு ஆசிரியர்கள் இடமாற்றம் செல்ல மறுக்கும் 3 ஆசிரியர்கள்

அரூர்: அரசு துவக்கப்பள்ளியில், ஆசிரியர்களிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னையால் தலைமையாசிரியர் உட்பட, நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். மூன்று ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு செல்ல மறுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக சிவாஜி என்பவரும், உதவி ஆசிரியர்களாக லெனின், சாந்தி, சுடர்மதி, ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். சில மாதங்களாக ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியருக்கு இடையே பள்ளிக்கு தாமதமாக வருவது தொடர்பாக, மோதல் ஏற்பட்டது. பள்ளியில் இருந்த மரங்களை, தலைமையாசிரியர் தன்னிச்சையாக வெட்டி விற்பனை செய்துள்ளதாகவும் புகார் வந்தது. இதுகுறித்து, கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், மொரப்பூர் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் விசாரிக்கின்றனர். மேலும், தலைமையாசிரியரின் தவறான நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியர்கள் புகார் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது, மொரப்பூர் உதவி தொடக்க அலுவலர் ஜீவா, தலைமையாசிரியர் உள்ளிட்ட, நான்கு ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்வதாக கூறி உத்தரவை வழங்கினார்.
இதை ஆசிரியர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அந்த மாறுதல் உத்தரவை வருகை பதிவேட்டில் வைத்து விட்டு தலைமையாசிரியர் சிவாஜியை, உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜீவா அழைத்து சென்று, சிவாஜிக்கு சொந்த ஊரான சந்தப்பட்டி அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணியமர்த்தினார். அங்கு பணிபுரியும் பழனி என்பவர் வேறு பள்ளிக்கு செல்ல மறுத்து விட்டார். சிவாஜியும், ஜீவாவும் சேர்ந்து கொண்டு தங்களை பழி வாங்குவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, உதவி தொடக்க அலுவலர் ஜீவாவை தொடர்பு கொண்ட போது அவர் மொபைல்ஃ போனை துண்டித்து விட்டார்.