தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்காத ஆசிரியர்கள்: ’வெயிட்டேஜ் மார்க்’ முறையால் பாதிப்பு என புகார்


ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள் ளது. கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் முதலில் 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அப்போது தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மட்டும் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டது. அதன்படி, 150-க்கு 82 மார்க் எடுத்தால் பாஸ். இதனால், தகுதித் தேர்வில் கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிமுகம்
ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்களின் பிளஸ்-2 மதிப்பெண் (15 மார்க்), இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் (25), தகுதித்தேர்வு மதிப்பெண் (60)ஆகியவை கணக்கிடப்பட்டது.
இதேபோல், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு பிளஸ்-2 மார்க் (10), பட்டப் படிப்பு (15), பிஎட் (15), தகுதித்தேர்வு மதிப்பெண் (60) ஆகியவற்றை கொண்டு வெயிட்டேஜ் மார்க் மதிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 31,500 இடைநிலை ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டன.
82-க்கு வேலை 104-க்கு இல்லை
வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில் 11,254 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், 2,582 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கியது.
அதைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பிளஸ்-டூ, பட்டப் படிப்பு, பிஎட், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்த ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தகுதித் தேர்வில் 102 மார்க் எடுத்த எனக்கு வேலை கிடைக்கவில்லை, 82 மார்க் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:
கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 பொதுத் தேர்வானாலும் சரி, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பிலும் சரி அதிக மார்க் போடமாட்டார்கள். பிளஸ்-2 தேர்வில் 900 மார்க் வாங்கினாலே பெரிய விஷயம், அதேபோல்தான் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதும் கடினம். ஆனால், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக அதிக மார்க் போடுகிறார்கள்.
தகுதித் தேர்வு அடிப்படையில் நியமனம்
எனவே, 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் படித்து முடித்தவர்களின் மதிப்பெண்ணையும், கடந்த சில ஆண்டுகளில் படித்து முடித்தவர்களின் மதிப்பெண்ணையும் சமமாக கருத முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வதுதான் சரிசமமான போட்டியாக இருக்கும். எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்துவிட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.