புதிய ஆசிரியர் பணி நியமனம் மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்

    சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

                       புதிதாக தேர்வு பெற்றுள்ள, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதற்கான கலந்தாய்வு, இன்று முதல், வரும், செப்., 5ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 32 மையங்களில் நடக்கிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, சி.எஸ்.ஐ., செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலந்தாய்வு நடக்கிறது.
 
          திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, திருவள்ளூரில் உள்ள,  லட்சுமி மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் கலந்தாய்வு நடக்கிறது.

         சென்னை நகரம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளைச் சேர்ந்த சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், கணிதம் அல்லாத பாடங்களில், ஓரிரு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கலாம் என, கூறப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின், வேறு பகுதிகளில் உள்ள பள்ளியை தேர்வு செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.