6 நாட்களும் நேரடி வகுப்பு கட்டாயம் கல்லுாரிகளுக்கு மீண்டும் சுற்றறிக்கை

 சென்னை:'சனிக்கிழமை உட்பட வாரத்தின் ஆறு நாட்களிலும், நேரடி வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும்' என, அனைத்து வகை கல்லுாரிகளுக்கும், உயர் கல்வித்துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், செப்., 1 முதல் கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் துவங்கின. சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள், ஒவ்வொரு பிரிவாக பாடம் நடத்த முடிவானது.அதனால், கல்லுாரி பேராசிரியர்களுக்கு தேவையான பாட வேளைகள் கிடைக்காமல், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.


அறிவிப்பு


இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பாடங்களையே நடத்தி முடிக்காத நிலையில், இந்த மாதம் செமஸ்டர் தேர்வு நடத்தப்படுவதாக, அண்ணா பல்கலை அறிவித்தது. அதனால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், மாவட்ட வாரியாக போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் தொடர்பாக, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

இதன்பின், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, செயலர் கார்த்திகேயன் ஆகியோர் மாணவர் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தினர். அதில், செமஸ்டர் தேர்வை தள்ளி வைத்து, ஜன., 20க்கு பின் நடத்த முடிவானது. அனைத்து கல்லுாரிகளிலும் சனிக்கிழமை உட்பட வாரத்தின் ஆறு நாட்களும், நேரடியாக வகுப்புகளை நடத்தி பாடங்களை முடிக்க, உயர் கல்வித்துறை உத்தரவிட்டது.


அரசாணை

இடையில் கன மழையால் கல்லுாரிகள் செயல்படவில்லை. செமஸ்டர் தேர்வு துவங்க இன்னும் 50 நாட்களே உள்ளன. அதிலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறைகளும் வரவுள்ளன.இதை கருத்தில் வைத்து, அனைத்து இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில்மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 'உயர் கல்வித்துறையின் அரசாணை மற்றும் உயர்கல்வி அமைச்சரின் தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.'முடிவை பின்பற்றி, அனைத்து கல்லுாரிகளும், சனிக்கிழமை உட்பட வாரத்தின் ஆறு நாட்களும், நேரடி வகுப்புகளை கட்டாயம் நடத்தி, பாடங்களை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.