கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானம் இன்றி தவிப்பு... தினக்கூலியாக வேலை செய்யும் அவலம்...
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓரண்டாக தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் 300க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 40,000 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக தனியார் பள்ளிகள் மூடப்பட்டதால் அப்பள்ளி ஆசிரியர்கள் வருமானமின்றி வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். கொரோனா பரவல் முதல்அலையில், தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அதற்குள்ளாகவே கொரோனா 2ஆம் அலை பரவத் தொடங்கியுள்ளதால், மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போனது.இதன் காரணமாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் கிராமப் புறங்களில் உள்ள ஆசிரியர்கள் கட்டடம் மற்றும் விவசாய பணிகளுக்குசென்று தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர். அதிலும் சொற்ப வருமானமே கிடைப்பதாக ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
தெலங்கானாவில்
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 25 கிலோ இலவச அரிசி
வழங்குவது போல் தமிழக அரசும் தங்களுக்குவழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலத்திற்கு வெளிச்சமாக திகழும் ஆசிரியர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.