புதுடில்லி:'சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம்
உள்ளிட்ட வாரியங்கள் நடத்தும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்ய
வேண்டும் அல்லது ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்த வேண்டும்' என, மாணவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
வைரஸ் பரவல்
நாடு
முழுதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. இந்நிலையில்,
'திட்டமிட்டபடி, அடுத்த மாதத்தில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள்
நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும்,
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் அறிவித்துள்ளன. தேர்வுகளை
ரத்து செய்யக் கோரி, சமூக வலைதளங்களில், ஒரு லட்சம் மாணவர்கள் பதிவிட்டு
உள்ளனர். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
வழக்கமாக, செய்முறை தேர்வுகள்
ஜனவரியிலும், வாரியத் தேர்வுகள், பிப்., - மார்ச் மாதங்களிலும்
நடக்கும்.கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால், கடந்தாண்டு மார்ச்சில்
பள்ளிகள் மூடப்பட்டன. அதனால், எழுதாத தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,
மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்
வழங்கப்பட்டது.தற்போது, அப்போதுள்ள நிலையைவிட மோசமாக உள்ளது. வைரஸ் பரவல்
மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில், தேர்வுகளை ரத்து செய்து, பள்ளிகளில்
நடத்தப்பட்ட முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும்.
ஆன்லைன்
வாயிலாகவே இந்தாண்டில் பெரும்பாலான வகுப்புகள் நடந்தன. அதனால், ஆன்லைன்
வாயிலாக தேர்வு நடத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'தேர்வுகளை
பிரச்னையின்றி நடத்துவதற்கு, தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 'அதனால் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை'
என, சி.பி.எஸ்.இ., உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.