தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்

 


சென்னை: தமிழக அரசின், 2021 -- 22ம் ஆண்டிற் கான, இடைக்கால பட் ஜெட்டை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., சட்டசபையில், நாளை தாக்கல் செய்கிறார்.அ.தி.மு.க., அரசின் பதவி காலம், மே, 24ல் நிறைவடைகிறது.

சட்டசபை பொதுத்தேர்தல், ஏப்ரல் மூன்றாவது வாரம் நடக்கலாம்; எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். தேதி அறிவித்த பின், அரசு சார்பில், எந்த அறிவிப்பையும் வெளியிட இயலாது.தேர்தல் முடியும் வரை, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, துறை செலவுக்காக, இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யப்படும்.புதிய அரசு அமைந்த பின், 2021 -- 22ம் ஆண்டிற்கான, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, கலைவாணர் அரங்கில் உள்ள, மூன்றாவது தளத்தில், சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது.நாளை காலை, 11:00 மணிக்கு, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., 2021 -- 22ம் ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை, சட்டசபையில் தாக்கல் செய்கிறார்; இது, ஓ.பி.எஸ்.,சின், 11வது பட்ஜெட் உரை.கடந்தாண்டு பட்ஜெட்டில், 2021ம் ஆண்டு மார்ச் இறுதியில், நிகரக்கடன், 4.56 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.தற்போது, கொரோனா நிவாரணம், பொங்கல் பரிசு தொகுப்பாக, ரேஷன் கார்டுக்கு, 2,௫00 ரூபாய் வழங்கியது, பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற காரணங்களால், கடன் தொகை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சட்டசபை தேர்தல் வர உள்ளதால், முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். பட்ஜெட் கூட்டத் தொடரில், 110 விதியின் கீழ், முதல்வர் இ.பி.எஸ்., முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, தகவல் வெளியாகி உள்ளது.கொரோனா பரிசோதனைசட்டசபை கூட்டத்தில் பங்கேற்க உள்ள சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை ஊழியர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் என, அனவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.கொரோனா பரிசோதனையில், 'நெகட்டிவ்' என, முடிவு வந்தவர்கள் மட்டுமே, கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர் என, சட்டசபை செயலர் சீனிவாசன் தெரிவித்தார்.