ஓய்வு வயது அதிகரிப்பு? ஊழியர் சங்கம் கண்டனம்


 மதுரை; ''ஓய்வு வயதை, 60 ஆக அதிகரிப்பது, இளைஞர்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலர் செல்வம் குற்றம் சாட்டினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்தார்.அவரது வழியில் ஆட்சி செய்வதாக கூறும் தமிழக அரசு, இத்திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், முதல்வர் அழைத்து பேசாதது ஏமாற்றமளிக்கிறது.இதற்காக சென்னையில் பிப்., 19ல், பேரணியில் ஈடுபட்ட போது, போலீசார் தாக்கியதில் அரசு ஊழியர்கள் பலர் படுகாயமுற்றனர்.

இச்சம்பவத்தை கண்டித்து, பிப்., 23ல் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.குறை தீர்ப்பு மையத்தை, 1,100 எண்ணில் அழைத்தால் குறைகள் கேட்டு நிவர்த்தி செய்யப்படும் என முதல்வர் அறிவிக்கிறார். ஆனால், நான்கு ஆண்டுகளாக பல முறை குறைகளை சுட்டிகாட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை.மாநிலத்தில், பல்வேறு துறைகளில், 4.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1 கோடி இளைஞர்கள் வேலைக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயதை அதிகரிக்க ஒரு போதும் கேட்கவில்லை. ஓய்வு வயதை, 60 ஆக அதிகரிப்பது, தமிழக அரசு, இளைஞர்களுக்கு செய்யும் துரோகம்.இவ்வாறு, அவர் கூறினார்.