தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு; சென்னையில் நாளை கவுன்சிலிங்

 


சென்னை : முதுநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங், நாளை நடத்தப்படுகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் பணிகளை தேர்தலுக்குள் முடிக்க, பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.முதற்கட்டமாக, உயர்கல்வி முடித்த அலுவலக பணியாளர்களுக்கு, இரண்டு சதவீத ஒதுக்கீட்டில் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு தரப்பட்டது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.


500 பேர் பட்டியல்


இந்நிலையில், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 500 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.இதற்கான கவுன்சிலிங், சென்னை மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலை பள்ளியில் நாளை காலை, 8:45 மணிக்கு, நடத்தப்படுகிறது. தேர்வான ஆசிரியர்கள், ஒரு மணி நேரம் முன்னதாகவே, கவுன்சிலிங் நடக்கும் இடத்துக்கு வர வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.


டி.இ.ஓ., பதவி உயர்வு


இதற்கிடையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.இதற்காக மேல்நிலை பள்ளிகளில் இருந்து, 12 மற்றும் உயர்நிலை பள்ளிகளில் இருந்து, 14 பேர், பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான நன்னடத்தைகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.