டியிருப்பு பகுதிகளில் புதிதாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரித்து அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011ல், ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் 1 கி.மீ. தொலைவிற்குள் தொடக்கப்பள்ளி வசதியும், 3 கி.மீ. தொலைவிற்குள் நடுநிலைப் பள்ளி வசதியும் இருத்தல் வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் விவரம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கட்டமைப்பில் கூறியுள்ளவாறு புவியியல் தகவல் முறை மற்றும் கள ஆய்வு மூலம் கடந்த 2018-19ம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் 2021-2022ல் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்ல மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்த விவரங்கள் மற்றும் பள்ளி வரைபட பயிற்சி மூலம் பெறப்பட உள்ளது. அதன்படி குடியிருப்பிற்கு அருகில் 5 கி.மீ தொலைவில் உயர்நிலைப்பள்ளி இல்லையென்றால், நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், 8 கி.மீ தொலைவில் மேல்நிலைப்பள்ளி இல்லாத நிலையில், உயர் நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தலாம். 8ம் வகுப்பில் 70 மாணவர்களுக்குக் குறையாமல் சேர வாய்ப்பு உள்ள நடுநிலைப்பள்ளிகள் உயர் நிலைப்பள்ளியாகவும், 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 100 மாணவர்கள் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தலாம்.
எஸ்சி மக்கள் அதிகமாக உள்ள இடங்கள், பெண்கள் பள்ளிகளை தரம் உயர்த்தலாம். போக்குவரத்து வசதி இல்லாத மற்றும் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் பயில உண்டு உறைவிட பள்ளிகள், விடுதிகள் வழங்கவும் கூறப்பட்டுள்ளது.இவ்விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வட்டார வள மையங்கள் சார்ந்த பள்ளிகளில் பராமரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பொதுமக்களின் பங்களிப்பு
நடுநிலைப்பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்கள் பங்குத் தொகை ₹1 லட்சமும், உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ2 லட்சமும் அரசு கணக்கில் செல்லுத்தப்பட வேண்டும். மாநகராட்சிக்கு 8 கிரவுண்டு, மாவட்ட தலைமையகம் 8 கிரவுண்டு, நகராட்சிக்கு 10 கிரவுண்டு, பேரூராட்சியில் ஒரு ஏக்கர், ஊராட்சியில் 3 ஏக்கர் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.