முதல், 2ம் ஆண்டு மாணவர்களுக்கு 21 முதல் கல்லுாரிகளில் வகுப்புகள்


 சென்னை:கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 21ம் தேதி முதல், நேரடி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


கொரோனா தொற்று பரவியதால், தமிழகம் முழுதும் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. கோடை கால விடுமுறைமுடிந்த பிறகும், கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததால், புதிய கல்வி ஆண்டில், கல்வி நிறுவனங்களை திறக்காமல், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதால், கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப் படுகின்றன.

முதற்கட்டமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், முதுநிலை இறுதியாண்டு மற்றும்ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, டிச., 2ல் நேரடி வகுப்புகள் துவங்கின. இதையடுத்து, அனைத்து வகை படிப்புகளிலும், இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, டிச.,7ல் நேரடி வகுப்புகள் துவங்கி உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, கல்லுாரிகளில் முதலாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகளை துவக்க, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, கல்லுாரி கல்வி மண்டல இயக்குனர்கள் மற்றும் கல்லுாரிமுதல்வர்களிடம் உயர் கல்வித் துறை கருத்து கேட்டுள்ளது.

கல்லுாரிகளை திறந்த பின், மாணவர்களின் உடல்நலம் எப்படியுள்ளது; கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில்,வரும், 21ம் தேதி முதல், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் நேரடியாக வகுப்புகள் துவங்கலாமா என, முதல்வரின் ஒப்புதலை கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.