சென்னை : தமிழகம் முழுதும், அரசின் சார்பில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, 'நீட்' இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில், நீட் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.இதன்படி, இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, தனியார் நிறுவனத்தின் வழியே, ஆன்லைனில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு, 14 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு நேற்று முதல் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் துவங்கின. இந்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதால், நீட் பயிற்சிக்கு மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.