ஊதிய உயர்வு பேச்சு நடத்த 12 சங்கங்களுக்கு அழைப்பு

 

சென்னை:ரேஷன் கடை ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்து, இம்மாதம், 6ம் தேதி நடக்கும் பேச்சில் பங்கேற்க வருமாறு, தமிழக அரசு அமைத்துள்ள குழு, 12 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


கூட்டுறவு துறை சார்பில், 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில், விற்பனையாளர், எடையாளராக பணிபுரிவோருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தம், இம்மாதம் முடிகிறது.

 இதையடுத்து, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிசீலித்து, அறிக்கை அளிக்க, எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை, தமிழக அரசு சமீபத்தில் நியமித்தது. கூட்டுறவு கூடுதல் பதிவாளரும், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனருமான சக்தி சரவணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அரசின் நிதித்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் கூட்டம், சென்னை, பாரிமுனையில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கியில், வரும், 6ம் தேதி, காலை, 10:15 மணிக்கு நடக்கிறது.அதில் பங்கேற்க, குழு சார்பில், 12 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஊதிய உயர்வு வழங்க முடியாது.எனவே, விரைந்து பேச்சு நடத்தி, டிச., மாதத்திற்குள் ஊதிய உயர்வை அறிவித்து, உடனே செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.