மாணவர்களின் மீதான நடவடிக்கை ஆசிரியர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - ஆய்வில் தகவல்.

 

மிசோரி பல்கலைக்கழகத்தில் பயின்று மேரிலாந்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெனிபர் லாயிட் என்பவர் தன்னுடைய மாணவர்களின் மனநிலையைப் பொருத்து தன்னுடைய மனநிலை மாறுவதாகக் கூறுகிறார்

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் ஒரு கடினமான சூழ்நிலையில் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது அதனை மாணவர்களிடம் கூறினால் அவர்கள் கவனிப்பதோடு இதுதொடர்பான அவர்களின் சூழ்நிலையையும் என்னிடம் பகிர்கிறார்கள். இதனால் இரு தரப்புக்குமே இது ஒரு மோசமான நாளாக மாறிவிடுகிறது என்கிறார்.

எம்.யூ. கல்வியியல் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றவருமான கொலின் எடி என்பவர், மிசோரி தடுப்பு அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றும் தனது நண்பர்களுடன் இணைந்து 9 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் ஒரு ஆய்வை நடத்தினார். அப்போது, அவர்களின் வகுப்பறைகளில் உள்ள மாணவர்கள் பள்ளி நிர்வாகிகளால் இடைநீக்கம் செய்யப்படும்போது, வகுப்பாசிரியர்களும் உணர்ச்சிவசப்பட்டு இறுதியில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது.

  'வகுப்பறை சூழலில் ஒரு வகையான தண்டனையாக, மாணவர்களை இடைநீக்கம் செய்வது உண்மையில் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது மாணவர்களின் சாதனைகளை குறைப்பது மட்டுமல்லாமல், அவர்கள் கற்றலை முழுவதுமாக விடவும் அதிக வாய்ப்பிருக்கிறது. பள்ளிகளை கற்றலுக்கான சாதகமான இடமாக மாற்ற விரும்பினால், அவ்விடம் ஆசிரியர்களுக்கு சாதகமான பணியிடமாக இருப்பதை பள்ளி நிர்வாகம் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு மாணவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் அவர்களை சரிசெய்ய, அந்த சூழ்நிலையை சரியாக கையாள ஆசிரியர்கள் அதற்கான உத்திகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஒரு நட்புறவு இருக்க வேண்டும்,.

பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய மூன்று தரப்பும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போடு இருந்தால் மட்டுமே பள்ளிகளை சிறந்த கற்றலுக்கான இடமாக மாற்ற முடியும்.

அதேபோன்று, வகுப்பறைகளில் ஆசிரியர்களின் சில நடவடிக்கைகளும், மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. எனவே, வகுப்பறை மேலாண்மை மற்றும் மன அழுத்தத்தை சரிசெய்வதில் மாணவர்களுக்கு ஆதரவாக இருப்பது ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். அவ்வாறு செய்தால், அது நீண்ட காலத்திற்கு மாணவர்களிடம் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று ஆய்வாளர் கொலின் எடி கூறுகிறார்.

'நன்கு பழக்கமான நண்பர்கள் அருகில் இருக்கும்போது அது தங்களுக்கு உதவியாக இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு யாரும் இல்லாத சூழ்நிலையில் அவர்களது திறன் குறைவாகவே உள்ளது. இதனை வகுப்பறைகளில் நாங்கள் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். எனவே, பள்ளி சூழலில் மாணவர்களுக்கு சக மாணவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது' என்று ஆசிரியர் லாயிட் கூறினார்.

ஆசிரியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் முதல் ஐந்து ஆண்டுகளில் தொழிலை விட்டு வெளியேறுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே, மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களின் மன அழுத்தத்தை சரிசெய்ய பள்ளி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். இது மாணவர்களிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எடி கூறுகிறார்.