இன்ஜி., கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலா? விசாரணை நடத்த சிறப்பு கமிட்டி அமைப்பு!


 சென்னை; மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகள் குறித்து விசாரணை நடத்த, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் இடம் பெற்ற கமிட்டி அறிவிக்கப் பட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, இன்ஜினியரிங் சேர்க்கை, ஆன்லைன் கவுன்சிலிங், அக்.,1ல் துவங்கியுள்ளது. நான்கு கட்டம்இந்த கவுன்சிலிங்கில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கும் நடவடிக்கை, இரு தினங்களுக்கு முன் துவங்கியது. இன்று உத்தேச ஒதுக்கீடும், நாளை இறுதி ஒதுக்கீடும் வழங்கப்பட உள்ளது.

இதையடுத்து, வரும், 8ம் தேதி பொது கவுன்சிலிங் துவங்குகிறது. இந்த கவுன்சிலிங் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்நிலையில், மாணவர்களின் விருப்ப பதிவுக்காக, கவுன்சிலிங்கில் பங்கேற்கும், 461 கல்லுாரிகளின் பட்டியலை கவுன்சிலிங் குழு வெளியிட்டுள்ளது.கவுன்சிலிங் குறியீட்டு எண் அடிப்படையில், அகர வரிசையிலும், கல்லுாரிகளின் பெயர்களை, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அதேபோல், தமிழக அரசின் கட்டண நிர்ணய குழுவால் முடிவு செய்யப்பட்டு, கல்லுாரிகள் வசூலிக்க வேண்டிய கட்டண விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன

.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள சுயநிதி கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., ஆகிய படிப்புகளில், தேசிய தர அமைப்பான, என்.பி.ஏ., அங்கீகாரம் இல்லாத பாடங்களுக்கு, ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய்; அங்கீகாரம் பெற்ற பாடங்களுக்கு, 55 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நடவடிக்கைஅதேபோல, தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளில், என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுகளுக்கு, 87 ஆயிரம் ரூபாய்; அங்கீகாரம் பெறாத பிரிவுகளுக்கு, 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டணமானது, கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை, சிறப்பு கட்டணம், ஆய்வகம், கணினி, இணையதள பயன்பாடு, விளையாட்டு, நுாலகம், வேலைவாய்ப்பு பயிற்சி, பராமரிப்பு - உள்கட்டமைப்பு கட்டணம் மற்றும் கல்வி இணை சார் நடவடிக்கைகள் அனைத்துக்கும் சேர்ந்தது.இந்த கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கும் கல்லுாரிகள் மீது, மாணவர்கள் புகார் அளிக்கலாம். இதற்காக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின், தேர்வு பிரிவு கூடுதல் இயக்குனர் அருளரசு தலைமையில், நான்கு பேராசிரியர்கள் இடம் பெற்ற கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.இந்த கமிட்டியில், கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் தாமரை, அண்ணா பல்கலையின் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் செந்தில், அண்ணா பல்கலை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் இளையபெருமாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இந்த கமிட்டியினரிடம், மாணவர்கள் தங்கள் புகாரை அளிக்கலாம் என, தமிழக உயர்கல்வி துறை அறிவித்து உள்ளது.