தலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, B.Ed படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கணினி பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சரவணன், முதுகலை அறிவியல் பட்டதாரியான
இவர் பள்ளி நிர்வாகத்திற்கு கட்டுப்படாமல் ஒழுங்கீனமாக செயல்பட்டு வந்ததால், தலைமை ஆசிரியரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது பணி உயர்வுக்காக கல்வியியல் (B. Ed) கல்வி பயில எண்ணிய சரவணன் டெல்லியிலுள்ள திறந்தநிலை பல்கலைகழகம் ஒன்றில் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளார்.இதையடுத்து சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் தலைமையாசிரியர் சின்னதுரையின் கையொப்பத்தை போலியாக தனது கையால் போட்டு பள்ளி முத்திரை குத்திய சரவணன் அத்துடன் இணைத்து அனுப்பிய பல்கலைகழக சேர்க்கை கட்டணத்திற்கான வரைவோலைக்கான தொகை ரூ 500-க்கு பதில் ரூ 400-க்கு எடுத்து அனுப்பியுள்ளார்.
இதனால் பல்கலைகழகத்தால் நிராகரிக்கப்பட்ட சரவணனின் B.Ed விண்ணப்பம் மீண்டும் பள்ளி முகவரிக்கே திருப்பி அனுப்பப்பட அது தலைமையாசிரியரின் கைக்கே வந்துள்ளது. கவரை பிரித்து பார்த்த தலைமை ஆசிரியர் சின்னதுரை தனது கையொப்பம் போலியாக போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்று சரவணனிடம் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. விளைவு தற்போது தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சரவணனை தேட தற்போது முதுகலை பட்டதாரி கணினி ஆசிரியரான சரவணன் தலைமறைவாகி தேடப்படும் குற்றவாளியாகியுள்ளார்.
மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தை கற்று தர வேண்டிய ஆசிரியர் ஒருவரே மோசடி பேர்வழி யாகி போலீசாரால் தேடப்பட்டு வரும் சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.