மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: உடனடியாக ஆளுநரின் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.!

 

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி  மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையே, உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, நீட் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு  10% உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடந்து முடிந்த சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மசோதா பேரவையில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது

இதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் உள்ஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதற்கிடையே, நீட் தேர்வு முடிவு வெளியிடும் முன் அரசுப் பள்ளி  மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரியும், தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசன்னா ராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள், உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் என்ன? முடிவு எடுத்துள்ளார். தற்போது  அரசாணையின் நிலை என்னவாக உள்ளது. அரசுப்பள்ளி மாணவருக்கு 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குவது பற்றி பிற்பகல் 2.30 மணிக்குள் ஆளுநரின் செயலர் பதில் தர ஆணையிட்டனர். நீதிமன்ற உத்தரவை மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் ஆளுநரின் செயலருக்கு அனுப்பவும் ஆணையிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் 16-ம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகும் நிலையில், உடனடியாக முடிவெடுப்பது அவசியம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.