10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு: இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம்

 SSLC, HSC, Exam, 10ம் வகுப்பு, பிளஸ், பொதுத்தேர்வுசென்னை : தமிழக பாட திட்டத்தில்10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை இரு மாதங்கள் தள்ளிவைக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக 2019 - 20ம் கல்வி ஆண்டில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வை நடத்த முடியாமல் பெரும் சிக்கல் ஏற்பட்டது.தற்போதைய புதிய கல்வி ஆண்டிலும் இன்னும் பள்ளிகள், கல்லுாரிகளை திறந்து வகுப்புகளை நடத்த முடியவில்லை. நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான வகுப்புகள் தாமதமாகியுள்ள நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும் முதல் பருவ தேர்வும் இன்னும் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் மட்டும் பருவ இடைத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது. உயர்நிலை படிப்புகளான இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பிளஸ் 2 பாடங்களே அடிப்படை என்பதால் அந்த பாடங்களை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவும் மாணவர்களுக்கு பல்வேறு திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் கூடுதல் அவகாசம் தேவை. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மார்ச்சுக்கு பதில் மே மாத கடைசி அல்லது ஜூனுக்கு தள்ளி வைக்கலாமா என பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.இது குறித்து நிபுணர் குழு அமைத்து விரிவாக ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.


என்.டி.ஏ.,விடம் ஆலோசனை:


பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர 'நீட், ஜே.இ.இ., நாட்டா, கியூசெட்' என பல்வேறு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு நுழைவு தேர்வுகளை எப்போது நடத்துவது என என்.டி.ஏ. இன்னும் முடிவு செய்யவில்லை. நுழைவு தேர்வுகளின் தேதிகள் தள்ளி போகும் நிலையில் பிளஸ் 2 தேர்வுகளையும் தள்ளி வைக்க முடியும். இது குறித்து தமிழக கல்வி அதிகாரிகள் என்.டி.ஏ.விடம் ஆலோசனை பெறவும் திட்டமிட்டுள்ளனர்.