மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய உயர் கல்வித்துறை சார்பில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்பது தொடர்பாக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளரும், தேசிய கல்வி கொள்கை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவருமான ஆபூர்வா, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் இன்று (வியாழக்கிழமை) ஆன்லைன் மூலம் கருத்து கேட்கப்பட இருக்கிறது. இதற்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை கருத்துகளை கேட்கிறது.
அந்தந்த பல்கலைக்கழகங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது