கோவை:காலாண்டு விடுமுறையின் போது, பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய, வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க, மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.சேர்க்கை பணிகள், நிர்வாக பணிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதோடு, வட்டார வாரியாக, பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரின் கீழ், பத்து பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதேபோல், வட்டார வாரியாக, பள்ளிகள் பிரித்து, தலைமையாசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.சில அரசுப்பள்ளிகளில் சேர்க்கை இரட்டிப்பாகியுள்ள நிலையில், சில பள்ளிகளில் சேர்க்கை சரிந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கான காரணத்தை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, காலாண்டு விடுமுறையில், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என, வட்டார கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில், 'பள்ளிகளில் கற்பித்தல் பணிகள், ஆன்லைனில் நடப்பதால்,
பிற செயல்பாடுகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்த பள்ளியிலும் வகுப்பு நடத்த கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.இதை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய, வட்டார வாரியாக, கல்வி அதிகாரிகள் அடங்கிய குழு, ஆய்வு செய்யும். சேர்க்கை, கல்வி கட்டண புகார்கள் விசாரித்து, அறிக்கை தயாரிக்கப்படும்' என்றனர்.