பழைய பயனாளர்களுக்கும் ஜியோ ஃபைபரின் 30 நாள் இலவச சேவை பொருந்தும்...
இந்தியாவில் முன்னணி நெட்வொர்க்கிங் நிறுவனமாக ஜியோ இருந்து வருகிறது. நிறுவனம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே தன்னுடைய அதிரடி அறிவிப்பினால் அதிகப்படியான வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுத்தது. அதன்படி சில தினங்களுக்கு முன்னால் ஜியோ ஃபைபரில் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. புதிதாக ஜியோ ஃபைபர் சேவையைப் பெறுபவர்கள் 30 நாட்கள் அதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதன் பின்பு சேவையைத் தொடர விரும்பாத பட்சத்தில் எந்தக் கேள்வியும் இன்றி ஜியோ நிறுவனம் சேவையை ரத்து செய்துகொள்ளும் என்றும் அறிவித்தது. இந்தத் திட்டமானது செப்டம்பர் 1 -ஆம் தேதி (நேற்றில்) முதல் அமலுக்கு வந்தது. இது பழைய ஜியோ ஃபைபர் பயனாளர்களுக்கு பொருந்தாது என்றும் முன்னர் ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் ஜியோ நிறுவனம் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்துள்ளது. அதன்படி இந்தச் சேவையை பழைய பயனாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தச் செய்தியை ஜியோ நிறுவனம் தன்னுடைய ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வருகிறது.