புதிய மாணவர் சேர்க்கை: அரசு பள்ளிகளில் துவக்கம்

 

சென்னை; தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, நேற்று மாணவர் சேர்க்கை துவங்கியது. கொரோனா தொற்று பிரச்னையால், நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு விதமான தளர்வுகளை அறிவித்துள்ளது.அதேநேரம், அனைத்து மாநிலங்களிலும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. வரும், 31 வரை, கல்வி நிறுவனங்களை திறந்து பாடம் நடத்த வேண்டாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், மாணவர்கள் பலர், பள்ளிகளை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் ஒன்பதாம் வகுப்புக்கும், 10ம் வகுப்பு முடித்தவர்கள், பிளஸ் 1க்கும், சேர வேண்டிய நிலை உள்ளது.

எனவே, அனைத்து வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, புதிய மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

சேர்க்கை முடிந்த உடன், மாணவர்களுக்கான சீருடை, புத்தகப்பை மற்றும் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.மாணவர் சேர்க்கையை தினமும் நடத்துவதற்கு, தேவையான முன்னேற்பாடுகளை, பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.