பெற்றோரை நேரடியாக சந்தித்து கருத்து கேட்க களமிறங்கிய கல்வித்துறை
உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் கருத்து கேட்டு வருகின்றனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கல்வியாண்டு நிறைவு பெறாமலே மார்ச் மாதம் இறுதியிலிருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.புதிய கல்வியாண்டு, 2020-21 துவங்கியும், வைரஸ் பாதிப்புகள் குறையாத காரணத்தால், பள்ளிகள் திறக்கப்படவில்லை.மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு வீடியோ பாடங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.பத்தாம் வகுப்பு மாணவர்ளுக்கு புத்தகம் மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, 'லேப்டாப்'களில் பாடங்கள் குறித்த வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், குழந்தைகள் வீட்டிலிருப்பதால் படிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், பெற்றோர் புகார் கூறி வருகின்றனர்.கொரோனா பாதிப்பு நிலை தொடர்வதால், பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோரின் மனநிலையை அறிந்துகொள்ள அவர்களின் கருத்துகளை கேட்டு கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 300 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களை தலைமையாசிரியர்கள் சந்தித்து அவர்களின் கருத்துகளை எழுத்துபூர்வமாக பெற்று, கருத்துகளை தொகுத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வி மாவட்ட அலுவலரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கல்வி மாவட்ட அலுவலர் பழனிச்சாமி கூறுகையில், ''தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களின் பெற்றோரை தனித்தனியாக பள்ளிக்கு வர செய்தோ அல்லது நேரில் சென்றோ கருத்துகளை கேட்டு தொகுத்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ''பெற்றோர் பள்ளிக்கு வருவதாக இருப்பின், சமூக விலகல் பின்பற்றுவது, முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் வேண்டும்,'' என்றார்.